வேலூர் பெண்கள் மத்திய சிறையிலிருந்த நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவரே ஆஜராகி வாதாடியதை தொடர்ந்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது. 10 நாட்களுக்குள்ஆவணங்களை பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும் என்றும்  அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்கவோ, பேட்டியளிக்கவோ கூடாது என்றும்  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை பரோல் உத்தரவு கிடைத்தவுடன் சுமார் 8.30 மணி அளவில் அவர் சிறையிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில்  காலை 9 மணி அளவில்  நளினி சிறையிலிருந்து வெளியே வந்தார். நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். மேலும்  வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களையும் நளினி சமர்ப்பித்துள்ளார். இதன்படி நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார்.

Related Posts