வேலூர் மக்களவைத் தொகுதியில் வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் – தலைமை தேர்தல் அதிகாரி

வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள  850 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜுலை 18ஆம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டார். வேலூரில் மொத்தம் உள்ள ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என்றும், 179 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2கோடியே 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.

Related Posts