வேலைவாய்ப்புக்காகவும், வாகன வசதிக்காகவுமே சென்னை – சேலம் 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது

வேலைவாய்ப்புக்காகவும், வாகன வசதிக்காகவுமே சென்னை – சேலம் 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் : ஜூன்-24

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாகன எண்ணிக்கை பெருக்கத்துக்கு ஏற்ப, சாலைகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை என்றும், மத்திய அரசு கொண்டுவரும் இந்த திட்டத்துக்கு மாநில அரசு உதவி செய்வதாகவும் அவர் கூறினார். மேலும், சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளதால், விமான நிலைய விரிவாக்கமும் தவிர்க்க முடியாதது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா அரசு பிரதிநிதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்திவந்ததால், மத்திய அரசே பிரதிநிதியை நியமித்துள்ளதால், அந்த ஆணையம் அமைக்கப்பட்டு விட்டதாக கூறிய முதலமைச்சர், விரைவில் தமிழகத்திற்கான காவிரி நீர் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நாமக்கல்லில் அனுமதிக்கப்பட்ட இடத்தைவிட்டு, மற்றொரு இடத்தில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்ததால், திமுகவினர் கைது செய்யப்பட்டதாக கூறிய முதலமைச்சர், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்தார்.

 

Related Posts