வைகை அணை, பாலாறு பொருந்தலாறு அணை, மஞ்சளாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக, வைகை அணை, பாலாறு பொருந்தலாறு அணை மற்றும் மஞ்சளாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பிரதான பாசன பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் இல்லை எனவும், குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று, குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வரும் 22ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு மொத்தம் 345 புள்ளி 60 மில்லி கன அடிக்கு மிகாமல் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக, வரும் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வினாடிக்கு 60 கனஅடி வீதமும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 31 வரை வினாடிக்கு 50 கன அடி வீதமும், பிப்ரவரி ஒன்று முதல் மார்ச் 15 வரை வினாடிக்கு 45 கன அடி வீதமும் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை வினாடிக்கு 40 கன அடி வீதமும், டிசம்பர் ஒன்று முதல் பிப்ரவரி 28 வரை வினாடிக்கு 30 கன அடி வீதமும், மார்ச் ஒன்று முதல் மார்ச் 15 வரை வினாடிக்கு 20 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

 

Related Posts