வைகோவுக்கு ஆதின மருதாசல அடிகளார் வாழ்த்து

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நாடாளுமன்றப் பணிகள் சிறக்க வேண்டும் என்று  பேரூர் ஆதின மருதாசல அடிகளார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக தலைமை நிலையமான தாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுச் செயலாளர் வைகோவுடன் தமிழ் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து பேரூர் ஆதின மருதாசல அடிகளார் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்  அப்போது, வைகோவின் நாடாளுமன்றப் பணிகள் சிறக்க வாழ்த்துகள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களின் அழிவின் அடையாளங்களைப் பார்த்து வேதனை அடைவதாகவும்  இவர்களுக்கு மீண்டும் ஒரு விடியலும் புது வாழ்வும் கிடைப்பதற்காக இறைவனை இறைஞ்சுவதாக அவர் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்ற தங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும் என்றும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்கட்டும் என்றும் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த வைகோ, ஈழத்தமிழர்களின் அவலங்களை சொல்லும்போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்ற நிலையிலேயே எடுத்துக் கொள்வார்கள் என்றும்  தாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கே மக்களுக்கு எடுத்துக் கூறும் போதுதான் அதை நடுநிலையாளர்கள் நல்லோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என சொன்னதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேபோல், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் அமைப்பாளரும், எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான உடுமலை ரவியும்  வைகோவுடன் பேசியதாக மதிமுக தலைமை நிலையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயண்  சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து திருக்குறளை பரிசாக அளித்தார்.

Related Posts