வைகோவை போன்ற தலைவரைக் காண்பது அரிது : மன்மோகன் சிங் நெகிழ்ச்சி

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவை போன்ற தலைவரைக் காண்பது அரிது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

மாநிலங்களவையில் வைகோ உரையாற்றியது அருமையாக இருந்ததாகவும், குடும்பத்தோடு வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்றும் சந்திப்பின்போது மன்மோகன் சிங் கூறியதாக மதிமுக தலைமை கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்திப்பின்போது பேசிய மன்மோகன் சிங், தமக்கு 86 வயது ஆவதாகவும், தான்  வைகோவின் மூத்த அண்ணன் எனவும், வைகோ தன்னுடைய இளைய தம்பி எனவும் குறிப்பிட்டார். தன் குடும்பத்தில் வைகோவும் ஒருவர் எனவும், வைகோவைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது எனவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

சென்னையில் தன்னுடைய புத்தகத்தை வெளியிட்டு பேசும்போது தன்னை மிகவும் பாராட்டியதாகவும், அதற்காக தங்களுக்கு நன்றி  தெரிவித்து கொள்வதாகவும் வைகோ கூறினார்.

Related Posts