அரசியல்

மாநில மொழிகள் புறக்கணிப்பு : வைகோ குற்றச்சாட்டு

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் மாநில மொழிகள் புறக்கணிப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில், பள்ளி தலைமைக்கான தேசிய மையம் சார்பில், ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு, வரும் ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், நவம்பர் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதை வைகோ நினைவு கூர்ந்துள்ளார். அதில், விருப்பம் உள்ள கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் தலைமைப் பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது காணொளியை, இந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் மத்திய அரசானது பள்ளி தலைமைக்கான தேசிய மையம் தொடங்கிய பிறகு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் தற்போது ஆசிரியர்களில் இந்தி, ஆங்கிலம் மொழி ஆளுமை மிக்கவர்கள் மட்டுமே தலைமைத் திறன் மேம்பாடு பயிற்சி பெற முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வரையறுத்து இருப்பதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதனை இறுதி செய்வதற்குள் ஒவ்வொன்றாக செயல்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்று அவர் கூறியுள்ளார். பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமே தவிர, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியை வலிந்து திணிப்பது ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் டில்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்கள் தலைமைப் பண்பு மேம்பாடு மாநாடு மற்றும் பயிலரங்கில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆளுமைமிக்க  ஆசிரியர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் வைகோ கூறியுள்ளார்.

 

Tags
Show More

Related News

Back to top button
Close