ஸ்டெர்லைட் நச்சு ஆலை வழக்கு: தீர்ப்பாயத்தில் நீதிக்குச் சாவு மணி! தமிழக அரசின் மோசடி நாடகம் வைகோ எச்சரிக்கை

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி மாநகர் சுற்றுவட்டார மக்களுக்கு பெரும் கேடாய் அமைந்துள்ள ஸடெர்லைட் தாமிர ஆலை மராட்டிய மாநிலத்திலிருந்து விரட்டப்பட்டு கோவா, குஜராத் மாநிலங்கள் நுழையவிடாமல் தடுத்து, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நாசகார ஆலையாக அதிமுக அரசால் அமைந்தது.

காற்று, நிலம், நீர் அனைத்தையும் நச்சுமயமாக்கும் திட்டம் என்பதால் 22 ஆண்டுகளாக அதனை அகற்றுவதற்காகப் போராடி வருகிறேன்.

2018 மே 22 ஆம் நாள் ஸடெர்லைட்டை எதிர்க்கும் போராட்டங்களை நசுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் காவல்துறை ஈவு இரக்கமின்றி 13 பேரைச் சுட்டுக் கொன்றது. அதில் 11 பேர் உச்சந் தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று ஆதாரபூர்வமாக செய்தி வந்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் ஆலைக்கு எதிராக எரிமலையாய் சீறியதால் அண்ணா திமுக அரசு மிகப்பெரிய கபட நாடகத்தை நடத்தியது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் ஆலையை மூடுவதற்குரிய ஆணைகளைப் பிறப்பித்தன. 2018 ஜூன் 22  ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் சி.பி.செல்வம், நீதியரசர் பசீர் அகமது அமர்வில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய ஆணையை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று கோரி வழக்குத் தொடுத்தேன். வழக்கறிஞர் அஜ்மல்கான் எனக்காக வாதாடினார்.

“தமிழக அரசு, அமைச்சரவையைக் கூட்டி ஆலை மூடுவதற்குரிய காரணங்களை திட்டவட்டமாகத் தெரிவித்து கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்” என்ற எனது கோரிக்கையை நீதியரசர்கள் ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்திலேயே அறிவித்தனர். ஆனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், “மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடுவதற்கு தந்த ஆணையையே அரசு கொள்கை முடிவாக மூடச்சொல்லிவிட்டது” என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஆலையைத் திறப்பதற்காக முறையீடு செய்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் வெளிப்படையாகவே பட்டவர்த்தனமாக தூத்துக்குடி ஆலைக்கு ஆதரவாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஸ்டெர்லைட் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அரிமா சுந்தரம், “ஆலையை மூடுவதற்குரிய கொள்கை முடிவை தமிழக அரசு அறிவித்திருந்தால் தான் தீர்ப்பாயத்திற்கு வந்திருக்க முடியாது என்றும், சென்னை உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோதான் மேல்முறையீடு செய்திருக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

22 ஆண்டுகளாக இந்த வழக்கில் போராடி வருகிற நான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நானே வாதங்களை முன்வைத்து 2010 செப்டம்பர் 28 இல் நீதிபதி எலிபி தருமராவ், நீதிபதி பால்வசந்தகுமார் அமர்வில் ஸடெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தீர்ப்பைப் பெற்றிருந்த போதிலும், உச்சநீதிமன்றத்தில் ஆலையின் மேல்முறையீட்டில் என் வாதங்களை எடுத்து வைத்தேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பட்நாயக், கோகலே அமர்வு ஆலையை இயக்கலாம் என்று 2013 ஏப்ரல் 2 ஆம் நாள் தீர்ப்பு அளித்த போதிலும், சுற்றுச் சூழலைக் காக்க நான் போராடுவதை தங்கள் தீர்ப்பிலேயே பாராட்டியபோதிலும் பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி கோயல் என்னை அவமரியாதையாக நடத்தியதோடு, பேசவே அனுமதிக்க மறுத்தார்.

2018 டிசம்பர் 10 ஆம் நாள் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடுமையாக நான் போராடியதன் பின்னர் நீதிபதி கோயல், எனக்கு 25 நிமிடம் பேச  வாய்ப்புத் தந்தார்.

நீதிபதியைப் பார்த்து, “நீங்கள் முன்கூட்டியே முடிவெடுத்துக்கொண்டு, இந்த வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்கிறீர்கள். என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள் என்பதை என்னால் யூகிக்க முடியும்” என்று சொன்னேன். செய்தியாளர்களிடம், “ஆலையை இயக்குவதற்கான தீர்ப்புதான் வரப்போகிறது” என்றும் சொன்னேன்.

2018 டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு அளித்தத் தீர்ப்பு, அமர்வின் முறையான முத்திரைகளோடு வெளிவருவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தின் இணையதளத்தில் பிற்பகல் 1.15 நிமிடத்துக்கே பதிவாகியது அநீதியின் உச்சகட்டமாகும்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பு டிசம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 1.15 நிமிடத்துக்கு வேதாந்தா குழுமத்திற்கு செய்தி வெளியிடும் அமைப்பாக உள்ள அப்பாஸ பாண்டியா அமைப்பின் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. நீதித்துறை வரலாற்றில், ஸடெர்லைட் வழக்கில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.

இந்தப் பின்னணியில் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி திபேன் 2018 டிசம்பர் 21 ஆம் நாள் ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்பட்ட நிலைமையை விளக்கமாக எடுத்துக்கூறியபின் நீதியரசர் கே.கே.சசிதரன்,  நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு ஆலையைத் திறக்கக்கூடாது என்றும், இதுகுறித்து ஜனவரி 21 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார 99 விழுக்காடு மக்கள் ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த ஆலையில் பணியாற்றுவோர் வேலைவாய்ப்புப் போய்விடும் என்றும், இந்தியாவில் தாமிர உற்பத்தி குறைந்துவிடும் என்றும் சில மேதாவிகள் கூறுகின்றனர். ஆலையை மூடும்போது அதில் வேலை பார்த்தவர்களுக்கு உரிய வாழ்வாதாரப் பணத்தை ஆலை வழங்க வேண்டும். பத்து இலட்சம் மக்களுடைய உடல்நலமும், சுற்றுவட்டார விவசாயப் பாதுகாப்பும்தான் மிக முக்கியமானதாகும்.

தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டதை உரிய ஆதாரங்களோடு பக்கம் பக்கமாக என்னால் பட்டியலிட முடியும். இப்பொழுதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குதவற்கு மிகத் தந்திரமாக தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயலும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிசம்பர் 21 ஆம் தேதி ஆணைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தற்போது அணுகக்கூடாது; கேவியட் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் அப்பொழுது தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாம்.

தமிழக அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தானும் வழக்குத் தொடுக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “முயலோடும் சேர்ந்து ஓடுவது; அதே வேளையில்  வேட்டை நாயுடன் சேர்ந்து விரட்டுவது (Running with the Hare; hunting with the Hound)”, தமிழில் ஒரு பழமொழி உண்டு, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது”. இந்த மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஸ்டெர்லைட் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts