ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ இன்று கோவில்பட்டி அடுத்த கரிசல் குளத்தில் 2வது நாளாக பிரச்சாரம்

 

 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவில்பட்டி அடுத்த கரிசல்குளத்தில் இன்று 2வது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

ஏப்ரல்-18 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் இருந்து வாகனப் பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய வைகோ, எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு கோவில்பட்டி அடுத்த கரிசல்குளத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2வது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். கரிசல்குளத்தை தொடர்ந்து, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குசாலை உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, நேற்று எட்டயபுரம், புதூர் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலைக்காக கடந்த 22 ஆண்டுகளாக போராடிய ஒரே இயக்கம் மதிமுக மட்டும்தான் எனக் கூறினார். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் வரை, தனது போராட்டம் ஓயாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts