ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் தடியடி

தூத்துக்குடியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்  மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டி விரட்டி அடித்ததால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி : மே-22

தூத்துக்குடி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடங்கிய இப்போராட்டம் நாளடைவில் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவியது. இந்த நாசகார ஆலைய நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  வாகனப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கியதால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது.

போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் இன்று காலை முதலே ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர். அப்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள். அதேவேளையில் வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது,காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவலர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையின்போது காவல்துறையின் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த போராட்டங்களால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.

பின்னர் ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். காவல்துறை மட்டுமின்றி அரசு வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக மதுரை,விருதுநகர்,நெல்லை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் ஊர்வலம் வந்த சுமார் 200 பேர், நான்காம் கேட் அருகே கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினர்.இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Related Posts