ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 55வது நாளாக போராட்டம்

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி,  அப்பகுதி கிராம மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 55-வது நாளாக நீடித்து வருகிறது.

தூத்துக்குடி, ஏப்ரல்-07 

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும்,  அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 55-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts