ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவேன்: வைகோ திட்டவட்டம்

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி கொடுக்காததை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர் ஜெயகுமார் எத்திராஜ் அமர்வில் இன்று விசாரணை தொடங்கியது.அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு மனுத் தாக்கல் செய்தார். ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர் மோகன் பராசரன் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிபதி சுதந்திரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோதான் 1994-ஆம் ஆண்டில் இருந்தே  ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து  போராடி வருவதாக கூறினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது மட்டுமின்றி, பொதுமக்கள் நலனுக்காக தாம் போராடி வருவதை பட்டியலிட்டு நீதிபதியிடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதியரசர் சுதந்திரம் , உடனே விசாரணையில் வைகோ பங்கேற்கலாம்,” என்று அறிவித்தார். இன்றைக்கே தங்கள் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறியதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். ஆலை நிர்வாகம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள கோப்புகளின் பிரதிகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பின்னரே ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மோகன் பராசரன், வைகோவின் வாதங்கள் குறித்து ஒரு வார்த்தையைக் கூறி பலமாக சத்தமாகப் பேசினார். உடனே வார்த்தையை அளந்து பேசுக! என்று வைகோ அவரைப் பார்த்துச் சொன்னதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, ஸ்டெர்லைட் வழக்கறிஞரைப் பார்த்து விரலை நீட்டி பேசியதாகவும், இலட்சக்கணக்கான மக்களின் உயிரோடு ஸ்டெர்லைட் ஆலை விளையாடுகிறது என்றும் வைகோ கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதியாக வைகோ ஏற்கப்பட்டதைப்போல  தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா,வழக்கறிஞர் ராமசுப்பு ஆகியோரையும் இந்த வழக்கில் வாதிகளாக மேல்முறையீட்டு ஆணையம் சேர்த்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும் என்று அந்த நிர்வாகம் முனைப்போடு இருப்பதாகவும்,மோடி அரசை கையில் போட்டுக்கொண்டு எதை வேண்டுமோனாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

Related Posts