ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக நீதிபதி தருண் அகர்வால் நியமனம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

                ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக அந்நிறுவனத்தின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல், நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

               இதனிடையே,  ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி வசிப்தர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.  அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவானது 6வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

               ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக, ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஜே.வசிப்தர் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டதால்,  புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயமே பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

               இந்த கருத்தை ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம் எதிர்த்தார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வைத்தியநாதன், புதிய நீதிபதியாக யாரை நியமித்தாலும் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார்.

              இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய நீதிபதியை நியமித்து உடனே உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

               இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

               ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts