ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி : மே-28

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. நேற்று முதல் 144 தடை உத்தரவு திரும்பபெறப்பட்ட நிலையில், முடக்கிவைக்கப்பட்டிருந்த இணையதள சேவையும் சீரடைந்துள்ளது.  இந்நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 47 பேரையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தனர்.

பின்னர், அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி சம்பவம் நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டதாக கூறினார். காயமடைந்தவர்கள் முழுமையாக உடல்நலம் தேறி வருவார்கள் என நம்புவதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம்,  வன்முறையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தீவைத்து கொளுத்தப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோருடனும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

Related Posts