ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தமிழக அரசின் கொள்கை முடிவு ஏற்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட, உயர்மட்ட அதிகாரிகளிடையே கொள்கை முடிவு எடுக்கப்பட்டே அரசாணை வெளியிடப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தூத்துக்குடி : ஜூன்-22

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, வைகோ தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, விளக்கமளித்தார். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத்தான் அரசாணை வெளியிடப்பட்டது என்றும் வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.  

Related Posts