ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க மறுப்பு தெரிவித்ததால், ஆலை மூடப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பான வழக்குகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், சென்னை உயர்நீதின்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு துணை போகும் விதத்தில், மத்திய அரசு மத்திய நீர்வளத்துறை மூலம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு தொடர்பாகஆய்வு நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வறிக்கை தந்துள்ளதாகவும், இந்த அறிக்கை  கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள சுற்றுச் சூழல் துறைக்கு தெரிவிக்காமலேயே மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டது கடும் கண்டனத்துக்கு உரிய அத்துமீறல் செயல் என வைகோ சாடியுள்ளார்.

தமிழக அரசு ஏற்கனவே சுற்றுச் சூழல்துறை மூலம் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்து ஆணை பிறப்பித்ததை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை திடீரென்று ஆய்வு நடத்தி ஆதாரமற்ற அறிக்கையை வெளியிட்டதுடன் அதை  தமிழக அரசுக்கும் அனுப்பி, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட ஆய்வு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்  எனவும், எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

Related Posts