ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால் உறுதி

 

தமிழக அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என அதன் உரிமையாளரும், வேதாந்தா குழும இயக்குனருமான அனில் அகர்வால் கூறி உள்ளார்.

இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், 11 பேர் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை கேள்விட்டு மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.

மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வளர்ச்சி எங்களுடையது என்பதை அங்கிருக்கும் மக்களிடம் நாம் உறுதி செய்து இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம்.ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்றவுடன் மீண்டும் செயல்படும். தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவிகரமாக ஸ்டெர்லைட் ஆலை இருக்கும்.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தூத்துக்குடி, தமிழகத்தின் வளர்ச்சியையும் நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். நாங்கள் இந்தியாவின் சட்டத்தை மதிக்கிறோம். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என மீண்டும் தெரிவிக்கிறேன்

இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.

Related Posts