ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதில் தூத்துக்குடி மக்கள் உறுதியாக உள்ளனர்

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதில் தூத்துக்குடி மக்கள் உறுதியாக உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

        தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக மேகாலயா முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சதீஷ், சி.கார்போட்டிக், மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தக்குழு நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் சென்னை உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை பதிவு செய்ய ஆஜரானார்.  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில்  வழக்கறிஞர் ராமன் மற்றும் ஆதரிப்போர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர் கருத்துக் கேட்பு வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் நிறுவனம், பணத்தை செலவழித்து தனக்கு ஆதரவாக  ஆட்களை திரட்டி வந்து  மனுக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். தங்களது தரப்பு வாதத்தை 5ஆம் தேதி கேட்பதாக நீதிபதி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இன்று முழுவதும் ஸ்டெரலைட் ஆதரவு மனுக்களின் மீதான வாதங்கள் நடைபெற்றதாகவும்,. ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை மூட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது எனவும்  ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும் என்பதில் அங்குள்ள மக்கள் உறுதியாக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

        பசுமை தீர்ப்பாயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மனு அளித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.  வரும் 5ஆம் தேதி கூடும் பசுமை தீர்ப்பாயத்தில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று  நீதிபதியிடம் மனு அளித்ததாக அவர்  தெரிவித்தார்.

Related Posts