ஸ்டெர்லைட் ஆலையை மூட பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஆய்வுக்குழு பரிந்துரைக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஆய்வுக்குழு பரிந்துரைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

          தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் சதீஷ் கார்கொட்டி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி வரலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடிக்கு இன்று வந்த ஆய்வுக்குழு, உப்பாற்று ஓடைக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள தாமிர தாது கழிவுகளை பார்வையிட்டது . அப்போதுஆய்வுக்குழுவினரை சந்தித்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையால் மண்வளம் மற்றும்  காற்று மாசு அடைந்துள்ளது எனவும் இதை எதிர்த்து போராடிய 13 அப்பாவிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.  ஆலை கழிவுகள் சுமார் 15 அடி அழத்துக்கும் மேல் குழி தோண்டிக் கொட்டப்பட்டுள்ளதாகவும்,   இதனால் நீர்வளமும், நிலவளமும் கெட்டுப்போய் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே ஆய்வின் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட பரிந்துரைக்க வேண்டும் என வைகோ  கேட்டுக் கொண்டார்

            இந்தக்குழு தூத்துக்குடியில் நாளை முற்பகல் 11.30- மணிக்கு மக்களிடம் கருத்து கேட்பதாகவும்,  அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்  எனவும் வைகோ கூறினார்.

Related Posts