ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வைகோ நாளை மறுநாள் மீண்டும் பிரச்சாரம்

 

 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தூத்துக்குடி, ஏப்ரல்-24 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  இந்நிலையில், ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் வாகனப் பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். அதன்படி கோவில்பட்டியில் இருந்து வாகனப் பிரச்சாரத்தை கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய வைகோ, எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் மறுநாள் கோவில்பட்டி அடுத்த கரிசல்குளம், காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குசாலை உள்ளிட்ட இடங்களில் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி மெஞ்ஞானபுரம்,பரமன்குறிச்சி,உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே திட்டமிட்டபடி மக்களை சந்தித்து, வாகனத்தில் நின்றபடியே வைகோ பரப்புரை மேற்கொண்டார். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள்  மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சதித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதன்தொடர்ச்சியாக  நாளை மறுநாள் குலசை,மணப்பாடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகனத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். பின்னர் வரும் 28 ஆம் தேதி தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் மதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Posts