ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கில் வைகோவின் மனுவை ஏற்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு

 

டெல்லியில்  உள்ள  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்க கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடந்து இருந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி ரகுவேந்திர ரத்தோர், நிபுணர் சத்யவான் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திவிவேதியும் ஆஜரானார்கள் . வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், இந்த வழக்கில் தன்னையும் ஒருமனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என்று, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார்.  ஆனால், வைகோ போல் தாக்கல் செய்துள்ள மற்ற இருவரின் மனுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி நீதிபதி ரகுவேந்திர ரத்தோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல் முறையீட்டில், அத்தனை அமர்வுகளிலும் தாம் பங்கெடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தாம் தொடரப்பட்ட வழக்கில்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசாங்கத்தின் முடிவு என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்பிறகும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்ததால், எழுத்து மூலம் தாக்கல் செய்யுங்கள்என்று கூறிய நீதிபதி வருகிற 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில், தமது ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள அஞ்சித்தான், ஆலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்றார். அடுத்த விசாரணையின் போது நீதி கிடைக்கும் என்றும் வைகோ கூறினார்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

 

Related Posts