ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் கருத்து கூறிய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலில் தான் தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றதாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்  மேலும் இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்..

அதற்கு பதிலளித்த வைகோ, 22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காகவும், சுற்றுச் சூழலைக் காப்பதற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருவதாக தெரிவித்தார். தான் தாக்கல் செய்த  ரிட் மனு மீது அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 2010 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டதாகவும், பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் தன்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

2018 மே 22 இரத்தம் தோய்ந்த துக்ககரமான நாள் எனவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினார்கள் எனவும் தீர்ப்பாயத்தில்அவர் தெரிவித்தார்.  காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகவும், வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை எனவும் வைகோ தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவு செய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறியதாக வைகோ தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறிய கருத்து துரதிருஷ்டவசமானது என கூறிய வைகோ, யாரை நியமிக்க வேண்டும் என்பதை தீர்ப்பாயம்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, ஆலை நிர்வாகம்  அல்ல என்றார்.

முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் கூறிய நீதிபதி கோயல் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் வைகோவுடன் மதிமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், , வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Posts