ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டையில்  இன்று நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த பொதுச் செயலாளர் வைகோவுக்கு எல்லையில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இரு சக்கர வாகனங்களில தொண்டர்கள் அணி வகுக்க வைகோ நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தை அடைந்தார்

இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் முதல் கட்ட தேர்தல் நிதியாக 5 லட்சத்து 100 ரூபாயை மதிமுக பொது செயலாளர் வைகோவிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை பொது செயலாளர் வைகோ வழங்கினார். இதனை தொடந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் வைகோவிற்கு பொன்னாடை அணிவித்து மதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவுக்கு ஆலையை மீண்டும் திறக்கலாம் எனப் பரிந்துரை கூற எந்த அதிகாரமும் இல்லை என்றார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை எனவும், இது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகிவிட்டது எனவும் கூறினார்,பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் போது 20 நிமிடம் தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி கேட்க உள்ளதாகவும், அனுமதி மறுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். ஆலையை மீண்டும் இயக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கூற வாய்ப்புள்ளது கூறிய வைகோ, மீண்டும் ஆலை திறக்கப்படும் நிலை வந்தால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும் எடுக்கும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடந்து பேசிய வைகோ, அணைப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடித்து கொண்டிருப்பதாகவும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுத்தமாக அழிந்து விடும் என்றார்.  கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது எனவும் .அந்தந்த மாநிலத்திலேயே புதிய அணைகளை கட்டி நீரை திருப்பி விட்டு விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் கூட மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் சரியாக இயற்றவில்லை எனவும், மத்தியஅரசை கண்டிக்கவில்லை எனவும் வைகோ குறிப்பிட்டார்.

20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்துதான்  20 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வருமென தனக்கு தோன்றுவதாகவும், திமுக தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் எனவும் தெரிவித்தார். . தற்போது 234 தொகுதிகளிலும் மதிமுக சார்பில் தேர்தல் முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாகவும் வைகோ தெரிவித்தார்.

இதேபோல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Related Posts