ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு விரைவில் ஆய்வை தொடங்க உள்ள நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். எந்த அடிப்படையில் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கேட்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தனர். அதேசமயம் ஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts