ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது: வைகோ குற்றச்சாட்டு

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது  என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை, ஏப்ரல்-26

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வைகோ தாக்கல் செய்த பொதுநல வழக்கு, இன்று 26 ஏப்ரல் 2018 நீதியரசர் செல்வம், நீதியரசர் பஷீர் அகமது அமர்வில், முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்களுள் ஒருவரான அஜ்மல்கான், வைகோ சார்பில் வாதங்களை எடுத்து வைத்தார்.

அவரது வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருட்டு ஆலை, தூத்துக்குடி மாநகரையும் சுற்றுப்புறங்களையும் அழிக்கின்ற நாசகார நச்சு ஆலை என்பதால், மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களை நடத்திய மனுதாரர், 1996 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுநல வழக்குத் தொடுத்து, அவரே வாதாடினார்.

2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, நீதியரசர் எலிபி தர்மாராவ், நீதியரசர் பால் வசந்தகுமார் அமர்வு தீர்ப்பு அளித்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீடு செய்து, சென்னைத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றது.

மனுதாரர், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு ஆதாரங்களுடன் வாதங்களை முன்வைத்தார்.

2013 ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்தத் தீர்ப்பில், மனுதாரரின் பல்வேறு வாதங்களை ஏற்றுக் கொண்டபோதிலும், ‘ஸ்டெர்லைட் நிர்வாகம் வங்கியில் 100 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், இந்தத் தீர்ப்பு நிரந்தரமாக ஆலையை இயக்கும் தீர்ப்பு அல்ல என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்று கருதினால், எந்தக் கட்டத்திலும் ஆலையை மூட ஆணை பிறப்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை, 4 லட்சம் டன் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தி, 8 லட்சம் டன் உற்பத்தி செய்வதற்கு, ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் என்று ஒரு விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக அரசிடம் முன்வைத்தது.

இதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

முதலில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி, 2018 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதற்குப்பிறகு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகின்றது. அப்படியானால், ஆலையை மூடுவதற்கு ஏன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பிக்கவில்லை?

விரிவாக்கத் திட்டத்திற்கும் இதுவரை அனுமதி தராவிட்டாலும், வரும் நாள்களில் அனுமதி அளிக்க வாய்ப்பு இருக்கின்றது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், விரிவாக்கத்திற்குத் திட்டவட்டமாக அனுமதி மறுப்பதற்கும் இந்த நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்’ என்றார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘மாசு கட்டுப்பாட்டு வாரியம், மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு அனுமதியை நீட்டிக்கவில்லை என்றும், விரிவாக்கத்திற்கும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை’ என்றும் கூறினார்.

இந்த வழக்கை நீதிமன்றம், ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியது பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு நிரந்தரமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்காது. ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் சேர்ந்து கபட நாடகம் நடத்துகின்றன.

மார்ச் 31 ஆம் தேதியுடன் அனுமதி முடிந்து விட்டது என்று கூறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஏன் ஆணை பிறப்பிக்கவில்லை?

சிப்காட் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கிராமப்புற விவசாயிகளிடம் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் 22 ஆண்டுகளாக நான் போராடி வருகின்றேன். இன்று மாலை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறேன்; ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாநகரில், மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கின் அடுத்தடுத்த அமர்வுகளில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களோடு ஆலோசித்து நானே வாதாட இருக்கின்றேன்.’

இவ்வாறு கூறினார்.

 

 

Related Posts