ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 99சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள் : வைகோ

பொது வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 99சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பிக்க, மேகாலயா முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சதீஷ், சி.கார்போட்டிக், மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தக்குழு கடந்த 23ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் 24ந் தேதி விசாரணை நடைபெற்றது.. அப்போது மதிமுக பொதச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகினர். பின்னர் கருத்துக் கேட்பு அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி கருத்து கேட்பு கூட்டம்,சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி நான்கு லட்சம் விண்ணப்பங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.. கருத்துக் கேட்புக் கூட்டம் இன்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு  ஆதரவாக செயல்பட்டு வந்த தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதே குற்றச்சாட்டை ஸ்டெர்லைட் நிர்வாகம் திருப்புவதாக கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கூற நீதிபதி தருண் அகர்வால் குழு எல்லோருக்கும் வாய்ப்பளித்தாக அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும், அப்படி நடத்தினால் 99சதவீதம் பேர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என் கூறுவார்கள் என நீதிபதியிடம் தெரிவித்ததாகவும் வைகோ கூறினார்.

வரும் 27, 28, ஆகிய தேதிகளில் மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் 29ந் தேதியும் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றிய கார்த்திபன் என்ற இளைஞர் ஆலையில் ஏற்பட்ட ஒ௫ விபத்தில் ஒரு கையை இழந்ததாகவும் அவருக்கு தற்போது வரை ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த நிதியுதவியும் செய்யவில்லை என வைகோ தெரிவித்தார்

 

Related Posts