ஸ்டெர்லைட் நலத்திட்டங்களுக்கு எதிர்ப்பு: விடிய விடிய போராட்டம்

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனையடுத்து ஆலை மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடுதல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகித்தல் உள்ளிட்ட நலத்திட்டங்களை மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் எந்த ஒரு நலத்திட்ட உதவியும் தங்களுக்குத் தேவையில்லை எனக் கூறி பண்டாரம்பட்டி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் மைதானத்தில் அமர்ந்து விடிய விடிய அவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு அ.குமரெட்டியாபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த இரு கிராமங்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருப்பவையாகும்.

Related Posts