ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதி ஹபீஸ் சையத், ‘ஜமாஅத் உத் தவா’ என்னும் பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார்.  ஒரு பக்கம் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு,  மற்றொரு பக்கம் பயங்கரவாதிகளுடன் கைகோர்ப்பு என பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வருவதால் இரு நாடுகளின் உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது  தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில். பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார். தற்போது இந்த கூட்டத்தின்  புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை எழுப்பி உள்ளது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், பயங்கரவாதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தனது அமைச்சரை அனுப்பி உள்ளதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Related Posts