ஹாங்காங்கில் மீண்டும் பதற்றம்

ஹாங்காங்கில் மீண்டும் நடைபெறும் போராட்டத்தால் அங்கு பதற்ற நிலை உருவாகி உள்ளது.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரை, சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைகளில் திருத்தம் கொண்டு வர அங்குள்ள நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்த நிலையில், அந்த முடிவை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹாங்காங் நகரில் நேற்று மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் திரண்ட மக்கள் கறுப்பு ஆடைகள் அணிந்தும், அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் சாலைகளிலும் சாரை, சாரையாக நடந்து சென்றனர்.

சாலைகள் தோறும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்ற நிலையில் போலீசார் பல இடங்களிலும் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையையும் மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்த போது, சில இடங்களில் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் ஹாங்காங்கில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Related Posts