ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை  மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பாசன  மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய  மத்திய அரசைக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடி வருவதாகவும்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண் தொழில் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் முழுமையாகச் சூறையாடப்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளார். காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாகச் செயல்படுத்த துடிக்கின்ற மீத்தேன், ஹைட்ரோ கார்பன்,  ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் வருங்கால தலைமுறையின் வாழ்வு வினாக்குறி ஆகிவிடும் பேராபத்து சூழ்ந்து வருவதாகவும்,  இதனால், தமிழகம் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டதாகவும், இத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி கோரி இந்த இரு நிறுவனங்களும்  விண்ணப்பித்ததாகவும்  முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  இதற்கான அடிப்படைப் பணிகளை வேதாந்தா நிறுவனம் முடித்துவிட்டதாகவும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கிணற்றுக்கு 15 கோடிரூபாய் வீதம் மொத்தம் ஆயிரத்து 560 கோடி ரூபாய்  திட்டச் செலவில் மேலும் 104 கிணறுகள் அமைக்க. சுற்றுச் சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் வரை596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது என்று அவர் கூறியுள்ளார். எனவே, மத்திய – மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல்  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts