ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று நெடுவாசல் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை : மே-10

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததால், தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர். மேலும், இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கிராம மக்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. கிராம மக்களின் தொடர் போராட்டங்களால் இந்த முடிவை ஜெம் நிறுவனம் எடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன், ஜெம் நிறுவனம் இந்த திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும்  இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். மத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினர், நாளை மறுநாள் நெடுவாசலில் ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம் என்றார்.

Related Posts