ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க நாளை மனித சங்கிலி

 

காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்துள்ளது.   பிரிவு -1இல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு -2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன.

இதனால் விளைநிலங்கள் சாகுபடித் திறனை இழந்து மலடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதி வேளாண் மண்டலத்தைப் பேராபத்திலிருந்து பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் நாளை  மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் , தமிழக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாளை  மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி,கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவு இந்த மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் . மரக்காணத்தில் நடைபெறும்  மனிதச் சங்கிலியில் வைகோ பங்கேற்கிறார். மேலும்,  ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Posts