விடைத்தாள் மாற்றம் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாணவர்களின் பொறியியல் பட்டம் ரத்து செய்யப்படும்;அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது


 அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 மற்றும் 2018 கல்வி ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் மற்றும் அரியர்ஸ் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து, முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். விசாரணையில், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் தேர்வு காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட 37 ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. இதற்கு உடந்தையாக   தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் என்பவர் செயல்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் தொடர்புடைய 37 தற்காலிக பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த அண்ணா பல்கலைக்கழகம், தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ்க்கு எந்த கல்லூரியிலும் பணி வழங்க கூடாது என கடந்த மாதம் ஆணை பிறப்பித்தது.  மேலும், முறைகேட்டில் தொடர்புடைய 132 மாணவர்களுக்கும் பட்டத்தை ரத்து செய்வதாகவும், சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.  இந்நிலையில், இனிவரும் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் பொறியியல் படிப்பு தகுதி நீக்கம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் என யாரேனும், இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களுக்கு தங்களை அணுகினால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts