10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. தலித் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டுடன், இந்த 10 சதவீதமும் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் கல்வியில் 10 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் இடங்கள் கூடுதலாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடங்களை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 983 இடங்கள் வரும் 2019-20-ம் கல்வி ஆண்டிலும், மீதமுள்ள 95ஆயிரத்து 783 இடங்கள் 2020-21-ம் கல்வி ஆண்டிலும் ஏற்படுத்தப்படும். மேலும் , இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மத்திய கல்வி நிறுவனங்களுக்கு 4ஆயிரத்து 315 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல், அடுத்த 4 ஆண்டுகளில் 5 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்க 2 ஆயிரத்து 729  கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்த இடஒதுக்கீடு ஒப்புதலுக்காக அமைச்சரவையில் ஆலோசனையில் வைப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Posts