100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செக்குமேடு, மிட்டூர், ஆலங்காயம் வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்தால் மலைவாழ் மக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிலுவையில் உள்ள நியூடவுன் பாலம் கட்டுமானப் பணிகள், கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற உடன் மீண்டும் தொடங்கப்படும் என்று ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், திமுக அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

பின்னர் ஒகேனக்கல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூரில் தான் தொடங்கி வைத்ததை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆன பிறகும் ஏன் அதனை நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

காவிரி நதி நீர் பிரச்சனை, நீட் தேர்வு விவகாரம், தமிழ் மொழிக்கு ஆதரவு அளிப்பது போன்றவற்றுக்காக நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்து வருவதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், 39வது எம்பியாக கதிர் ஆனந்த் குரலும் டெல்லியில் ஒலிக்க வாக்காளர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Posts