12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை  எட்டியுள்ளதை அடுத்து அணையின் கீழ் பகுதியில் உள்ள 12 மாவட்டங்களுக்கு  பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக  மாநிலத்தில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை  தீவிரமடைந்துள்ளதால்,  கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு  நீர்வரத்து  மேலும்  அதிகரித்து வருகிறது.  இதையடுத்து,  அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது.  இதனால் காவிரியில்  3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக இருந்தது.  நண்பகல் 12 மணிக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாகவும், மாலை 4 மணிக்கு  65 ஆயிரம் கன அடியாகவும்  அதிகரித்துள்ளது.  கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக நேற்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து,  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு  திறக்கப்படும் நீரின் அளவு மாலை 5.30 மணிக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடியிலிருந்து  25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 89.67 டி.எம்.சி.யாக இருந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவும் பாசனத்துக்கு திறக்கப்படும்  நீரின் அளவும் இதே நிலையில் இருந்தால், நடப்பு ஆண்டில் முதல்முறையாக மேட்டூர் அணை இன்று நிரம்பும் என்று எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து மேட்டூர் பொதுப்பணித் துறை சார்பில் சேலம்,  ஈரோடு,  நாமக்கல்,  கரூர்,  பெரம்பலூர்,  அரியலூர், திருச்சி,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Posts