14-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி

2004- ம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட சுனாமியில் உயிர்களை பறிகொடுத்த உறவினர்கள் கடற்கரைப் பகுதியில் திரண்டு கடலில் பால் ஊற்றியும்,மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த பூகம்பத்தால்ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிப்பேரலை கடற்கரையோரப் பகுதிகளை தாக்கியது.  சுனாமியின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.. தமிழகத்தில் மட்டும் 7ஆயிரத்து941 பேர் உயிரிழந்தனர். . அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 039 பேரும், கன்னியாகுமரியில் 798 பேரும் மாண்டனர். கடற்கரையோரம் குவிந்து கிடந்தசடலங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமியால் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி,செருதூர், நாகூர் ஆகிய கடற்கரையில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் உயிர்நீத்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய கடலில் பால் ஊற்றியும்  மலர்தூவியும்  அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.   இதேபோல், தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மற்றும் குழந்தைகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Posts