144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிப்பு

செங்கோட்டையில் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.. அப்போது மீண்டும் மோதலில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தையடுத்து பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் கரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 6 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று காலையுடன் 144 தடையுத்தரவு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் வரும் 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Posts