15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி

மின்பற்றாக்குறையை சரிசெய்ய 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

      தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 3 மாதமாக மின்சாரம் தரவில்லை எனவும், ஆனாலும் நீர்மின் நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமை சமாளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். காற்றாலை மூலம் அதிகமாக மின்சாரம் கிடைத்ததால் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது எனவும், கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வடசென்னையில் அனல் மின்நிலையத்தில் 2அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது எனவும், இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குவதாகவும் அவர் கூறினார். நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை எனவும், மேற்கு வங்காளம்,ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் இருப்பது உண்மைதான் எனவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும் எனவும் தமிழகத்தில் இப்போது மின் வெட்டு இல்லை என்பதுதான் உண்மை எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Related Posts