160 கோடி ரூபாயை நிராகரித்தது பிரேசில்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 160 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் அதனை நிராகரித்துள்ளது.

ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்றது. இறுதிநாளான நேற்று அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இது உலகத்தின் பசுமை நுரையீரல் மீதான தாக்குதல் என ஐரோப்பிய தலைவர்கள் கூறினர். அமேசான் காட்டில் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் உள்ளது.  மீதிப்பகுதிகள் பொலிவியா, கொலம்பியா, ஈக்வெடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினேம் மற்றும் வெனிசுலா நாடுகளில் உள்ளன. இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ‘‘அமேசான் காட்டுத் தீயால்  பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்’’ என்றார். அமேசான் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இங்கிலாந்து 88 கோடி ரூபாய் வழங்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். இறுதியாக, அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 160 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை எனவும் பிரேசில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Related Posts