2வது நாளாக  சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் 2வது நாளாக  சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

            சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழமையான கோயில்களிலிருந்த சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமையேற்ற பிறகே  வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள், பழங்கால ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன.  மேலும், தீனதயாளனின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது கூட்டாளிகள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார். சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரன்வீர்ஷா வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ரன்வீர்ஷாவின் வீட்டில் குவியல் குவியலாக சிலைகள் இருந்ததைப் பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பஞ்சலோக சிலைகள் உட்பட அங்கு 89 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.. அவற்றை போலீசார்பறிமுதல் செய்தனர். கோவில்களில் காணப்படும் பிரமாண்டமான கற்சிலைகளும் ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்தது. இந்த சிலைகளை கிரேன் மூலம் தூக்கி லாரிகளில் ஏற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மொத்தம் 89 சிலைகள், கல்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,.  பழமையான இந்த சிலைகள் அனைத்தும் கோவில்களில் இருந்து திருடப்பட்டவை எனவும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், ரன்வீர்ஷா வீட்டில் 2வது நாளாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8 சிலைகள், 21 தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts