2 ஆயிரத்து 300 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 300 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் 2 ஆயிரத்து 602 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் அத்திவரத விநாயகர், சங்கு விநாயகர், ராணுவ விநாயகர் என பல்வேறு வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 3 நாட்கள் வழிபாட்டுக்குப் பின் கடந்த 5-ஆம் தேதியும், நேற்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று நடைபெறும் விநாயகர் ஊர்வலங்கள் மூலம் சுமார் 2 ஆயிரத்து 300 சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படுகின்றன.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கிரேன்கள் உதவியுடன் சுமார் ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பக்கம் தவிர நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை மற்றும் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனம் அருகே என 6 இடங்களில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

Related Posts