2 வீடுகள் வாங்கியது குறித்து வி.கே.தஹில்ரமாணி க்கு சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து தஹில் ரமாணி ராஜினாமா செய்தார். கடந்த 21-ம் தேதி அவரது ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரமாணி விலகிய பின்னர், மத்திய உளவுத்துறை 5 பக்க  அறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில் தஹில் ரமாணி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு 2 வீடுகளை தஹில் ரமாணி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts