2000 ரூபாய் நோட்டை நிறுத்த ரிசர்வ் வங்கி முடிவு

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. அத்துடன், புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 2000 ரூபாய் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2017-18 நிதியாண்டின் போது 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19 ம் ஆண்டில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 ஆக குறைந்துள்ளது. சுமார் 14 ஆயிரத்து 400 கோடி அளவிற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் மதி்ப்பு 2019-ம் ஆண்டு நிதியாண்டில் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த ஆர்.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை 47 மில்லியன் அளவாக ஆர்.பி.ஐ. குறைத்துள்ளது.

Related Posts