2019 ஆம் ஆண்டில் இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் மகத்தான திருப்பங்கள் ஏற்படும்:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

2019 ஆம் ஆண்டில் இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் மகத்தான திருப்பங்கள் ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வாகன ஓட்டுநர் பொன்னாங்கண் மகள் சித்ராதேவி மற்றுத் தன்ராஜ் ஆகியோரின் திருமணம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது துணைவியார் ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். மணவிழாவில் உரையாற்றிய வைகோ,   அரசியலில் தொண்டர்கள் தீக்குளித்து இருக்கிறார்கள், ஆனால் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தீக்குளித்ததில்லை என்று தெரிவித்தார். ஆனால், காவேரி பிரச்சினையில் தனது மனைவியின் அண்ணன் மகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்ததை சுட்டிக்காட்டி   வைகோவின் குடும்பம் அந்த உயிர்த் தியாகத்தையும் செய்திருப்பதாக அவர் கூறினார்.

 நியூட்ரினோ திட்டத்தை தொடங்க பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 3ஆண்டுகளாக தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக வைகோ தெரிவித்தார். மோடி செல்ல வேண்டிய நாடுகளில் இன்னும் 20 அல்லது 30 நாடுகள் மட்டுமே உள்ளதாக கூறிய வைகோ,  அந்த நாடுகளுக்கும்  பிரதமர் சென்று வரவேண்டும் எனவும் ஏனென்றால், மோடி இனி எந்தக் காலத்திலும் பிரதமராக முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, நாட்டில் நல்லதொரு சூழல்நிலை உருவாகியிருக்கிறது எனவும், மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரசும் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் மகத்தான திருப்பங்கள் ஏற்படும் என வைகோ கூறினார்.

Related Posts