2020-ம் ஆண்டில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்க வாய்ப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், 2020-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 3 கட்டங்களாக அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட நிலையில், 5ம் கட்ட பணிகள் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், நீதியம்மாள் என்பவரின் நிலத்தில் நேற்று, 10 மீட்டர் நீளம் கொண்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. 20 சென்டி மீட்டர் நீளம், அகலம் கொண்ட கற்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன. சுடுமண் குழாயின் அருகிலும் இதுபோன்ற சிறிய தரை தளம் காணப்படுகிறது. இந்த தளத்தின் கீழ்புறம் உள்ளவற்றை அகழாய்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இது பெரும்பாலும் தரைத்தள கட்டுமானமாகவே இருக்க வாய்ப்புள்ளது. இதனை அகழாய்வு செய்த பின்னரே விபரங்கள் தெரிய வரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற உள்ளன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts