2021-ம் ஆண்டில் கொள்ளிடம் புதிய பாலத்தை கட்டி முடிக்க திட்டம்

2021-ம் ஆண்டில் கொள்ளிடம் புதிய பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள காவிரி மேலணையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வரும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முக்கொம்பு தற்காலிக தடுப்பணை, 2 லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாங்கும் அளவிற்கு வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று குடிமராமத்து பணிகள் தொடர்பாக மக்களின் தேவைகளை அறிந்து வருவதாகவும் சத்யகோபால் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே மாதம் 22ம் தேதி, வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சுமார் 38 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக பால பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தற்காலிக பால பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மேலணையின் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Posts