3வது முறையாக மீண்டும் முத்தலாக் அவசர சட்டம்

முத்தலாக் அவசர சட்டம் நேற்று 3வது முறையாக மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதையடுத்து முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில்,மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.. இதனால் முதல் அவசர சட்டம் காலாவதியான நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முத்தலாக் கூறும் ஆண்களுக்கு இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் 3ஆண்டு சிறை தண்டனையை நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. இதை ஏற்று நீதிபதியை அணுகி ஜாமீன் பெறும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன. ஆனாலும் இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைவதால் 2வது முறையாக பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் அவசர சட்டமும் காலாவதியாகிவிடும். இதனால் 3வது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல்வழங்கியது. இதைடுத்து முத்தலாக் அவசர சட்டத்தை நேற்று மீண்டும் பிறப்பித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

Related Posts