3 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை : பொருளாதார கண்காணிப்பு மையம்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என கூறி வருகிறது. இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நகர்புறங்களில் 9.6 சதவீதமும், கிராமப்புறங்களில் 7.8 சதவீதமும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2014 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி இருந்தார். ஆனால், இப்போதைய ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் இருக்கிற வேலையும் பறிபோய் இருப்பதை காட்டுகிறது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோன்று சேவைத் துறைகளின் வளர்ச்சியும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts