3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மையங்கள் திறக்கப்படும் : மோடி

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மையங்கள் திறக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

யோகாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுவோருக்கு பிரதமரின் யோகா விருது 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மேலும் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில் 12 சிறப்பு அஞ்சல் தலைகளையும் வெளியிட்டு அரியானா மாநிலத்தில் 10 ஆயுஷ் சுகாதார மையங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய மோடி, நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை திறக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அவற்றில் 4 ஆயிரம் மையங்கள் நடப்பாண்டிலேயே திறக்கப்படும் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் 16 ஆயிரம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய மோடி, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மருத்துவ உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனக் கூறினார்.

Related Posts